ஆடைத் தொழிற்துறையில் தையல்காரர்களின் பங்கு என்பது மிகவும் முக்கியமானது. அப்பேர்பட்ட தொழில் வல்லுனர்களின் திறமையையும், கலை அறிவையும் பாராட்டி கொண்டாடும் வகையில் உலக தையல்காரர்கள் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 28 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது.
தையல் இயந்திரத்தை முதன்முதலாக கண்டுபிடித்த வில்லியம் எலியாஸ் ஹோவின் பிறந்தநாளினை முன்னிட்டு உலகம் முழுவதும் தையக்காரர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
அவ்வகையில் இராமநாத புரம் மாவட்டம் பரமக்குடியில் பத்தாண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் மலர் அகாடெமி சார்பில் உலக தையல்காரர்கள் தினம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்த மலர் அகாடமியில் தையல் பயின்று, சிறு குறு தொழிலதிபர்களாக வளர்ந்துள்ள ராகவி மற்றும் உமா சுரேகா தலைமை விருந்தினர்களாக கவுரவிக்கப்பட்டனர்.
இராமநாதபுரம் எம் எஸ் ஸ்கில்ஸ் அகாடெமியின் நிறுவனர் கோவிந்த ராஜ், பரமக்குடி ஓய்வுபெற்ற ஆசிரியர் மணி மற்றும் நீம் பவுண்டேசன் நிறுவனர் லூயிஸ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
படிப்பதற்கு வயது ஒரு தடையல்ல வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் படித்துக் கொண்டே இருங்கள் என்று ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி அவர்களும் தையல் படிப்பதும் தொழில் முனைவதும் அவ்வளவு எளிதல்ல, உள்ளார்ந்த ஆர்வமும், ஈடுபாடும் இருந்தால் மட்டும் தான் எளிதில் தொழில் அதிபர்களாக உருவாக்க முடியும் என்று எம் எஸ் ஸ்கில்ஸ் மைய இயக்குனர் கோவிந்தராஜ் அவர்களும் வாழ்த்தி பேசினர்.
தொடர்ந்து மலர் அகாடமியின் மாணவியர் கலைநிகழ்ச்சிகள் நடத்தினர்.
விழாவின் போது எம்பிராய்டரி பயின்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் முன்னாள் மாணவி தொழில் அதிபராக உருவாக வாழ்த்தும் விதமாக மலர் கிராம நல அறக்கட்டளை சார்பில் தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
நிறைவாக மலர் கிராம நல அறக்கட்டளை நிறுவனர் பவித்ரா அனைவருக்கும் நன்றி கூறினார்.
விழா ஏற்பாடுகளை மலர் அகாடெமி பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.