தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருட்டு போவதாக காவல்துறைக்கு புகார் வந்தது. இதுத்தொடர்பாக டவுன் ஏஎஸ்பி மதன் உத்தரவின்பேரில், எஸ்.எஸ்.ஐ. சுடலைமுத்து மேற்பார்வையில், தலைமை காவலர்கள் செந்தில், முத்துசாமி, ரவிக்குமார், முத்துராஜ், சுப்பிரமணியன், முதல்நிலை காவலர்கள் மகாலிங்கம், செந்தில்குமார் திருமணிராஜன், முத்துப்பாண்டி விஜயகுமார் மற்றும் முத்தையாபுரம் தனிப்பிரிவு காவலர் ஜான்சன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முத்தையாபுரம் தோப்பு தெருவை சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் கற்குவேல் குமார் என்ற அப்பாச்சி குமார் (32) என்பதும் அவர் திருட்டு பைக் ஓட்டி வந்தது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் 11க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை திருடியதாக கூறியுள்ளார். இதையடுத்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் எங்கெல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததோ அங்கு சென்று போலீசார் பறிமுதல் செய்தனர் .
மேலும், அவரிடம் இருந்து இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்ய முயன்ற பழைய இரும்பு வியாபாரிகளான முத்தையாபுரம் ராஜூவ் நகரைச் சார்ந்த சவரிமுத்து மகன் மீன்செல்வம் (44) மற்றும் எம். தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்த சுந்தரவேல் மகன் பட்டுராஜா (44) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூன்று பேர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களை தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் வைத்து டவுன் ஏஎஸ்பி மதன், தனிப்படை போலீசாருடன் நேரில் பார்வையிட்டார்.