பல மாதங்களாக பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ள தூத்துக்குடி- திருச்செந்தூர் பிரதான சாலை மற்றும் ராமேஸ்வரம் செல்லும் ஐசிஆர் சாலைகள் போர்க்கால அடிப்படையில் உடனடியாக சரி செய்யக்கோரி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளரிடம் மாநகர தமிழக வெற்றிக் கழகம் சார்பாக முன்னாள் கவுன்சிலர் ஜி. ஆனந்தகுமார் மனு வழங்கினார்
அவர் வழங்கிய மனுவில் கூறியுள்ளதாவது,,
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வெளிமாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தூத்துக்குடி வழியாக திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மழையின் காரணமாக தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பிரதான சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் திருச்செந்தூருக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், இதனால் விபத்து உயிரிழப்புகளும் நடந்து வருகிறது. திருச்செந்தூர் கோவிலில் மாசி தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் இதில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தர உள்ளனர். எனவே, தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையை பக்தர்களின் நலன்கருதி போர்க்கால அடிப்படையில் உடனடியாக சரி செய்து தரவேண்டி கேட்டுக் கொள்கிறோம்.
மேலும், இதேபோல் தூத்துக்குடியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் கடற்கரை சாலை ( தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவமனை தொடங்கி) கடந்த 2023 ஆம் ஆண்டு பெய்தது மழை மற்றும் வெள்ளத்தால் மிகவும் சேதமடைந்தது. இதனால் ஐசிஆர் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் தினந்தோறும் வேதனையை அனுபவித்து வருகின்றனர். இரவு நேரங்களில் விபத்துகளும் நடந்து வருகின்றன.
எனவே, வாகன ஓட்டிகள்,பொதுமக்கள், பக்தர்கள், மற்றும் பள்ளி குழந்தைகளின் நலன்கருதி இந்த இரு சாலைகளையும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக சரி செய்து தரும்படி தமிழக வெற்றிக் கழகம் தூத்துக்குடி மாநகரம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
நிகழ்வில், ஜே.ஏ.சி. ராஜா ஜெ.ராஜா, ஹரிகுமார், சக்தி பாலா, காளிதாஸ், ஆத்திமுத்து, காளிராஜ், ஜெயம், பாலா, பிரபா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.