தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மாமண்ட கூட்ட அரங்கில் சாதாரண கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மற்றும் துணை மேயர் ஜெனிட்டா முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக எதிர்க்கட்சி கொறடாவும், 51வது வார்டு மாமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் மந்திர மூர்த்தி கலந்து கொண்டு பேசுகையில்,
தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த ஆகஸ்ட் 15ஆம்தேதி நாட்டின் 78வது சுதந்திர தினத்தின் போது, மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர் தூத்துக்குடியில் இல்லாத காரணத்தால் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தாததை கண்டித்து கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆசிரியர் காலனி பகுதியில் அனுமதியின்றி வேகத்தடை அமைத்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த விவின் என்பவர் குடும்பத்திற்கு மாநகராட்சி சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும். அதுபோல அவரது குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.
தூத்துக்குடி மாநகர முழுவதும் பிரபல உணவகங்களில் சுகாதார சீர்கேடு காரணமாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அதனை வலுப்படுத்தி தூத்துக்குடி மாநகர மக்களுக்கு சுகாதாரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி மாநகர பகுதியில் ஏற்கனவே பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை செய்ய சட்டம் உள்ளது. அதனை முழுமையாக அமல்படுத்தி தூத்துக்குடி மாநகர முழுவதும் பொது இடங்களில் புகை பிடிப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.
மாநகராட்சி குப்பை வண்டிகள் கடுமையான வேகத்தில் சென்றதால் கடந்த வாரம் விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். எனவே, இதுபோல் மேலும் நடைபெறாமல் இருக்க மாநகராட்சி குப்பை வண்டிகளுக்கு உரிய அறிவுறுத்தலை வழங்க வேண்டும் என அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் வழக்கறிஞர் மந்திரமூர்த்தி கோரிக்கை வைத்தார்.
நிகழ்வில், அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் ஜெயலட்சுமி, சுடலைமணி சென்பகச் செல்வன் பத்மாவதி, ஜெயராணி, ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Last Updated by admin on2024-11-21 12:11:05