மார்ச்/ஏப்ரல்-2025 நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுப் பணிகள் தொடர்பாக மாவட்ட அளவிலான தேர்வுக் கண்காணிப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (26.02.2025 ) பள்ளிக் கல்வித் துறை சார்பில், மார்ச் ஏப்ரல் 2025 இல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுப் பணிகள் தொடர்பாக மாவட்ட அளவிலான தேர்வுக் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது.
2024-2025 ஆம் ஆண்டு கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் 03.03.2025 முதல் 25.03.2025 முடிய உள்ள நாட்களில் நடைபெறவுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 90 தேர்வு மையங்களில் 8887 மாணவர்கள், 10609 மாணவிகள் என மொத்தம் 19496 தேர்வர்கள் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வினை எழுதவுள்ளனர்.
மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் 05.03.2025 முதல் 27.03.2025 முடிய உள்ள நாட்களில் நடைபெறவுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 90 தேர்வு மையங்களில் 8907 மாணவர்கள், 10869 மாணவிகள் என மொத்தம் 19776 தேர்வர்கள் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வினை எழுதுகின்றனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 28.03.2025 முதல் 15.04.2025 முடிய உள்ள நாட்களில் நடைபெறவுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 107 தேர்வு மையங்களில் 10711 மாணவர்கள், 11283 மாணவிகள் என மொத்தம் 21994 தேர்வர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுத உள்ளனர்.
பத்தாம் வகுப்பு மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்விற்கு 199 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 199 துறை அலுவலர்கள், 2699 அறைகள் கண்காணிப்பாளர்கள், 297 நிலையான படையினர். 507 சொல்வதை எழுதுபவர். 46 வழித்தட அலுவலர்கள். 20 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள். 394 ஆசிரியரல்லா பணியாளர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் போதுமான இடவசதி. சுத்தமான குடிநீர் மற்றும் தூய்மையான கழிப்பறை வசதிகள் உள்ளதா என்பதனை உறுதி செய்திட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கு உரிய போக்குவரத்து வசதி, காவலர் பாதுகாப்பு வசதி, தடையில்லா மின்சார வசதி போன்றவற்றை உறுதி செய்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
மேலும், மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவது தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்தவும், அச்சமின்றி தேர்வெழுத உரிய ஆலோசனைகள் பெறவும் 14417 கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.