தூத்துக்குடி மாவட்டம் முக்காணி தாமிரபரணி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற மூதாட்டியை காப்பற்ற ஆற்றுக்குள் இறங்கி உயிருடன் மீட்ட ஆத்தூர் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
தூத்துக்குடி முள்ளக்காடு அருகே உள்ள அபிராமி நகரைச் சேர்ந்தவர் துரைராஜ் மனைவி பிரம்மசக்தி (63). துரைராஜ் இறந்த நிலையில் பிரம்ம சக்தி தனது உறவினர் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தான் வைத்திருந்த பணத்தை இழந்ததால் வீட்டில் இருந்து வெளியே வந்த பிரம்மசக்தி ஆத்தூர் பகுதியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று (24-01-25) இரவு 7.30 மணியளவில் முக்காணி தாமிரபரணி பழைய ஆற்றுப்பாலத்தில் இருந்து தற்கொலை செய்து கொள்வதற்காக ஆற்றுக்குள் குதித்துள்ளார்.
இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் ஆத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் தலைமையிலான போலீசார் வந்தனர் அப்போது மூதாட்டி ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்ததை கண்ட இன்ஸ்பெக்டர் மாரியப்பன் போலீசார் உடனடியாக கயிற்றை கட்டி ஆற்றுக்குள் இறங்கி மூதாட்டியை மீட்டார். மீட்கப்பட்டுள்ள மூதாட்டி சிகிச்சைக்காக ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் குறைந்த அளவில் சென்றதால் மூதாட்டி உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.
உடனடியாக துணிச்சலுடன் ஆற்றுக்குள் இறங்கி மூதாட்டியை உயிருடன் மீட்ட ஆத்தூர் காவல் ஆய்வாளர் மாரியப்பனுக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.