தூத்துக்குடியில் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனையில் 12 கிலோ செறிவூட்டப்பட்ட கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்டு, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து தோனி மூலம் மாலத்தீவுக்கு கடத்தப்பட இருந்த 12 கிலோ ஆசிஸ் என்ற போதைப்பொருள் பறிமுதல் கடத்தலுக்கு துணை புரிந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை சேர்ந்த மாரிமுத்து என்பவர் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள பழைய வ.உ.சி துறைமுகம் வழியாக போதை பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து பழைய துறைமுகத்திற்கு வரும் நபர்கள் குறித்து தீவிர கண்காணிப்பில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இதில் நேற்று இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் தோனி மூலம் மாலத்தீவு நாட்டிற்கு 12 கிலோ செறிவூட்டப்பட்ட கஞ்சா ஆயில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
தொடர்ந்து மத்திய வருவாய் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இந்த போதை பொருள் கடத்தலுக்கு தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் பணிபுரிந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர் மாரிமுத்து உதவியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கடத்தலில் தொடர்புடைய சுதாகர், ஜேசுராஜ், கிங்சிலி, மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் மாரிமுத்து ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி பழைய துறைமுக பகுதியில் இருந்து மத்திய தொழிற் பாதுகாப்படை வீரர் துணையுடன் தோனி மூலம் போதை பொருள் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.