தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் சல்மா என்ற பெயரில் தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உடன்குடி பகுதியைச் சேர்ந்த பொன்சிங் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 22-ந் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக பள்ளி மாணவ-மாணவிகளை உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் அழைத்து சென்றுள்ளார்.
அங்கு முதல் நாள் போட்டி முடியாததால் மறுநாள் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவ-மாணவிகள், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோர் இரவில் தூத்துக்குடியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது, பொன்சிங், மாணவிகள் சிலரிடம் மது குடியுங்கள் என்று வற்புறுத்தியும், ஆபாசமாக இரட்டை அர்த்தத்தில் பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தங்களது உறவினர்களுடன் பள்ளிக்கு திரண்டு வந்து. ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முற்றுகையிட்னர். அதன்பிறகு கோவையில் தலைமறைவாக இருந்த ஆசிரியர் பொன் சிங்கை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் இ.ஆ.ப உத்தரவின் பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட உடன்குடி கிறிஸ்டியாநகரம் பகுதியைச் சேர்ந்த இஸ்ரவேல் மகன் பொன்சிங் (42) என்பவரை திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இன்று (03.12.2024) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.