நாசரேத் கர்ப்பிணி பேராசிரியை சாவில் மர்மம்- 4 வயது மகன் பேசிய வீடியோவால் பரபரப்பு.!.
தூத்துக்குடி நாசரேத்
By Mervin on | 2024-12-02 10:05:24
நாசரேத் கர்ப்பிணி பேராசிரியை சாவில் மர்மம்- 4 வயது மகன் பேசிய வீடியோவால் பரபரப்பு.!.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே குடும்ப பிரச்னையில் 5 மாத கர்ப்பிணியான தனியார் கல்லூரி பேராசிரியை மர்மமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம். அவரது 4 வயது மகன் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் திருமறையூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் பிரவீன்குமார்(35). நாசரேத்தை சேர்ந்த ஜெபசிங் சாமுவேல் மகள் ஷெர்லின் கோல்டா(35). இவர்கள் இருவரும் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு டிஜோ வின்ஸ் (4) என்ற மகன் உள்ளார். தம்பதி இருவரும் நாசரேத்தில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியர்களாக பணியாற்றி வந்தனர்.

பேராசிரியை ஷெர்லின் கோல்டா தற்போது 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இதனால் கல்லூரியில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த 22ம்தேதி இரவு தம்பதி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பிரவீன்குமார், குளியலறை சென்ற நேரத்தில் ஷெர்லின் கோல்டா, வீட்டின் பெட்ரூமில் சேலையால் தூக்கிட்டு தொங்கினார். குடும்பத்தினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து நாசரேத் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பேராசிரியை ஜெர்லின் கோல்டாவின் தந்தை ஜெபசிங் சாமுவேல், தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும் இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என கடந்த 25ம்தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக ஜெபசிங் சாமுவேலிடம், உடையார்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் விசாரணை நடத்தினார்.

அப்போது தாயை இழந்த 4 வயது குழந்தையான டிஜோ, தனது தாய் ஷெர்லினை தனது தந்தை பிரவீன் அடித்துவிட்டதால் இறந்து போனார் என மழலை மொழியில் பேசினார். இந்த காட்சியை உறவினர்கள் செல்போனில் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். தாய் மர்மமாக இறந்த நிலையில் அவரது 4 வயது மகன் பேசிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் கிறிஸ்டோபர் 


Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE