தூத்துக்குடியை சேர்ந்த ஒருவர் ஜெனரேட்டர் வாங்குவதற்காக இணையதளத்தில் தேடிய போது கிடைத்த ஹரி என்பவருடைய எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது அவர் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தியதால் ஜெனரேட்டர் தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பி மேற்படி தூத்துக்குடியை சேர்ந்த நபர் மொத்தம் ரூபாய் 5,10,000/- பணத்தை வங்கி கணக்கு மூலம் கொடுத்துள்ளார். ஆனால் மேற்படி ஹரி என்பவர் பணத்தை பெற்றுக் கொண்டு ஜெனரேட்டரை தராமல் ஏமாற்றி மோசடி செய்தார்.துகுறித்து அந்த நபர் National Cyber crime Reporting Portalல் புகார் பதிவு செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் உத்தரவின் பேரில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் (பொறுப்பு) சோமசுந்தரம் தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில் காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்கட்டளை காந்தி நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த தியாகராஜன் மகன் கண்ணன் (42) என்பவர் மேற்படி பாதிக்கப்பட்ட நபரிடம் ஹரி என பெயரைக் கூறி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து மேற்படி தனிப்படை போலீசார் மேற்படி கண்ணனை பெங்களூருவில் வைத்து கைது செய்து அவரிடம் இருந்து 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்த சைபர் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.