தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியிலுள்ள 28 செண்ட் நிலத்தை, அதன் உரிமையாளரான மெஞ்ஞானபுரம், அடைக்கலாபுரம் பகுதியை சேர்ந்த சங்கரவேல் மகன் உதயகுமார் (54) என்பவர் 2006ம் ஆண்டு மேற்படி நிலத்தை ஜெயபாண்டியன் என்பவருக்கு பொது ஆவணம் எழுதி கொடுத்து அந்த நிலத்தை ஜெயபாண்டியன் மோகனுக்கு கிரையம் செய்து கொடுத்து மோகன் என்பவர் மேற்படி நிலத்தை கடந்த 2010ம் ஆண்டு ஐஜினஸ் அந்தோணி குமார் என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்த நிலையில், மேற்படி நிலத்தை மோசடி செய்ய வேண்டும் எண்ணத்தில் ஏற்கனவே கிரையம் கொடுக்கப்பட்ட நிலத்தை உதயகுமார் தனது மனைவி சுகந்திக்கு தான செட்டில்மென்ட் எழுதி கொடுத்து மோசடி செய்ததாக மேற்படி ஐஜினஸ் அந்தோணி குமார் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து மேற்படி உதயகுமாரை மாவட்ட குற்ற பிரிவு II போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்டம் குற்றவியல் நீதிமன்றம் - IV நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி குபேரசுந்தர் நேற்று (08.10.2024) இவ்வழக்கின் குற்றவாளியான உதயகுமாருக்கு 3 வருட சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மேற்படி குற்றவாளி உதயகுமார் என்பவருக்கு இதேபோன்று ரோசாரி அருளானந்த் என்பவருடைய 62 சென்ட் நிலத்தை ஏமாற்றிய வழக்கில் கடந்த 07.10.2024 அன்று இதே நீதிமன்றத்தில் 3 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த மாவட்ட குற்ற பிரிவு II காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் கண்ணன், விசாரணைக்கு உதவியாக இருந்த பெண் தலைமை காவலர் ரோசிட்டா ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.