திருச்செந்தூர் கடலில் இருந்து அய்யா வைகுண்டர் அவதரித்த நாள் மாசி 20ஆம் தேதி என்று அய்யா வழி சாஸ்திரம் கூறுகிறது. இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில் அய்யா வைகுண்டரின் 193 ஆம் ஆண்டு அவதார தின விழா இன்று திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் உள்ள அய்யா வைகுண்டரின் அவதார பகுதியில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதற்காக அதிகாலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு தாலாட்டு பாடுதல் பள்ளி உணர்த்தல் அபயம் பாடுதல் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து, காலை 6.30 மணிக்கு சூரிய உதயத்தில் திருச்செந்தூர் கடலில் பதமிட்டு சூரிய பிரகாச சுத்த அய்யா வைகுண்டரை அவதார பதிக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கோவிலில் இருந்து அய்யா பணிவிடையாளர்கள் கையில் தாம்பூலத்தில் பூ மற்றும் பட்டுப்புடவை கொண்டு ஊர்வலமாக கடற்கரைக்கு வந்தனர். அங்கு சூரியன் உதயத்துக்காக காத்திருந்தனர். சூரியன் வந்ததும் கடல் கரையில் நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் அய்யா வைகுண்டர் அவதரித்ததாக எண்ணி அய்யா சிவ சிவ அரகரா என்று கோஷமிட்டனர்.
அதைத் தொடர்ந்து ஒரு செம்பு பாத்திரத்தில் கடலில் இறங்கி பதம் எடுத்தனர். அந்த கடல் நீரில் அய்யாவின் நாமத்தை கலந்து அங்கு நின்ற பக்தர்கள் மீது தீர்த்தமாக தெளித்தனர். தொடர்ந்து ஊர்வலமாக காவி வண்ண குடை பிடித்துக்கொண்டு அய்யாவின் அவதார பதிக்குள் வந்தனர்.அங்கு அய்யாவுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதை தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
இந்த சமயத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அய்யா வைகுண்டரின் அவதார பதி முன்புள்ள கடற்கரையில் குவிந்து கடலில் புனித நீராடி தலையில் தலைப்பாகை அணிந்து நெற்றியில் நாமமிட்டு அய்யா வைகுண்டரை வணங்கினர். காலை 6.40 மணிக்கு அவதார தின விழா பணிவிடைகளும் 7.30 மணிக்கு அன்னதர்மமும் இனிமமும் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அய்யா வைகுண்டரின் அவதார தின விழாவை முன்னிட்டு திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யா வைகுண்டரை குடும்பத்துடன் வணங்கினர்.
அய்யா வைகுண்டரின் அவதார தினவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.