தூத்துக்குடியில் சிறிய ரக ராக்கெட் தயாரிக்கும் பணி தொடக்கம்: ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
தூத்துக்குடி மாநகரம்
By Mervin on | 2025-02-21 10:16:54
தூத்துக்குடியில் சிறிய ரக ராக்கெட் தயாரிக்கும் பணி தொடக்கம்: ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

தூத்துக்குடியில் சிறியரக ராக்கெட் தயாரிக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில் இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி நவீன் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கும் மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து, இந்தியாவின் தனியார் விண்வெளி துறை, உலகளவில் அதிக கவனம் பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து காஸ்மிக்போர்ட் என்ற எங்களது ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் தலைமையகத்தை தூத்துக்குடி அருகே சுமார் 1.4 ஏக்கர் பரப்பளவில் நிறுவியுள்ளோம்.

இந்நிறுவனம் தூத்துக்குடியைச் சேர்ந்த நான் மற்றும் லிவான்ஸ் அமுதன் ஆகியோரால் இணைந்து நிறுவப்பட்டுள்ளது. தற்போது முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்பத்தை உலகளவில் போட்டித்திறனுடையதாக்க செலவினங்களை குறைக்க, மற்றும் மறு பயன்பாட்டிற்கான தொழில்நுட்பங்களை உருவாக்க மெத்தலாக்ஸ் (திரவநிலை மீத்தேன, ஆக்சிஜன்) எரிபொருள் இயக்கும் தொழில்நுட்பம் மூலம் இயங்கும் இயந்திரங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன்மூலம், குறைந்த செலவில் ராக்கெட் ஏவுவதற்கும் மீள்பயன்பாட்டுக்கும் பயன்படுத்தமுடியும். இந்தியாவிலேயே இந்த முறையை எங்களது நிறுவனம் தொடங்கியுள்ளது. அதற்கான முதற்கட்டப் பணிகள் நடைபெற்றுவருகிறது. 

முதலாவது சுமார் 15ஆயிரம் சதுர அடியில் ஒரு உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் கட்டப்பட்டு வருகிறது. இது வரும் ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளது. இந்நிறுவனத்தில், இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பொறியாளர்கள் சுமார் 200 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், இங்குள்ள பொறியாளர்கள், மகேந்திரகிரி, திருவனந்தபுரம், பெங்களூரு ஆகியவற்றில் பணியாற்றிய ஐஎஸ்ஆர்ஓ விஞ்ஞானிகள் வழிகாட்டுதலின்படி செயல்படுகின்றனர்.

தற்போது, முதற்கட்ட பரிசோதனை நிறைவடைந்துள்ளது. எங்களது ராக்கெட் மூலம் சுமார் 600 கிலோ எடை வரை செயற்கைக் கோள்களை ஏவ முடியும். முதல்கட்டமாக 120 நியூட்டன் உந்து சக்தி கொண்ட இயந்திரம் மூலம் சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. வரும் 2028ஆம் ஆண்டுக்குள் முழுமையாக சுமார் 600 கிலோ எடையினை கொண்டுசெல்லும் ராக்கெட் உருவாக்கப்படும். இதனால், சுமார் 100 கிலோ எடை கொண்ட 6 செயற்கைக் கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தலாம். மேலும், இதற்கான உதிரி பாகங்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறு, குறு தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தி அவர்கள் மூலம் உற்பத்தி செய்ய முயற்சி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் நேரடியாகவும்  மறைமுகமாகவும் சுமார் ஆயிரம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார்.



Last Updated by Mervin on2025-03-04 02:35:25

Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE