திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முக.ஸ்டாலின் 72வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் திமுகவினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மற்றும் மாநகர திமுக சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மற்றும் மேயர் ஆகியோர் தலைமையில், திமுக தலைமை வியக்கும் வகையில் சிறப்பாக செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று (02-03-2025) 40 வது வார்டு திமுக இளைஞரணி சார்பாக பனிமய மாதா கோவில் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இவ்விழாவில், பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் அப்பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் அழைக்கப்பட்ட நிலையில் அந்த பகுதி நடைமுறையில் உள்ள திமுக மாமன்ற உறுப்பினருக்கு அழைப்பு விடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
40வது வார்டு கவுன்சிலர் புறக்கணிப்பு
40வது வார்டில் நடைபெறும் முதல்வரின் பிறந்தநாள் விழாவில் அந்த வார்டை சார்ந்த திமுக கவுன்சிலர் ரிக்டா ஆர்தர் மச்சாதுவை அழைக்கவில்லை. ஒரு வார்டுக்குள் நடக்கும் திமுக நலத்திட்ட விழாவில் ஒரு மக்கள் பிரதிநிதி புறக்கணிக்கப்பட்டு இருப்பது அந்த வார்டு மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது ஏற்கனவே இந்த வார்டுக்குள் கவுன்சிலர் மற்றும் வட்ட செயலாளர் என இரு பிரிவினர்களாக செயல்பட்டு வருவதை மாவட்ட திமுக கண்டிக்காததால் ஏற்பட்டு வரும் குழப்பமே இதுபோன்ற புறக்கணிப்புக்கு காரணமாகி வருவதாக திமுக தொண்டர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
மேலும், தூத்துக்குடி மாநகரில் பெரும்பான்மையான பகுதிகளில் கவுன்சிலர் அமைச்சர் ஆதரவாளராக, வட்ட செயலாளர் மேயர் ஆதரவாளராக உள்ளனர்.அதைப்போலவே வட்ட செயலாளர் அமைச்சர் ஆதரவாளராக இருந்தால் கவுன்சிலர் மேயர் ஆதரவாளராக இருப்பதால் கட்சி பணியிலும், மக்கள் பணியிலும் பல்வேறு பின்னடைவுகளை மாநகர திமுக சந்திக்க நேரிடுவதாகவும் மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.
எனவே, தூத்துக்குடி மாவட்ட திமுக, இந்த பிரச்சனையில் தலையிட்டு இதுபோன்ற பிரிவினை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என திமுகவினர் இடையே கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.