தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்தவர் இசக்கி மகன் கண்ணன் (35) இவரது மனைவி ஜெனிஷா. இவர்கள் குடும்பத்தினருடன் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கோவிலுக்கு சென்று விட்டு முத்தையாபுரத்தில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார் . அதன்பிறகு திருச்செந்தூர் சாலை ஸ்பிக் நகரில் உள்ள முருகப்பா செட்டிநாடு மெஸ் ஹோட்டலுக்கு சாப்பிடுவதற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார்.
அப்போது தாய் ஜெனிஷா கழிவறைக்கு சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்த 3 வயது குழந்தை ஜெபினை கழிவறை வெளியே நிற்குமாறி கூறிவிட்டு சென்றுள்ளார். வெளியே வந்து பார்க்கும்போது குழந்தை அங்கு இல்லை. இதனால் குழந்தை தனது அப்பாவிடம் சென்று விட்டதாக எண்ணி அலட்சியமாக வெளியே வந்துள்ளார். அதன்பிறகு குழந்தையை தேடும்போது குழந்தை காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை தேடியுள்ளனர். அப்போது ஹோட்டல் கழிவறை அருகில் பராமரிப்பு இல்லாமல் திறந்த நிலையில் இருந்த கழிவுநீர் தொட்டியில் குழந்தை விழுந்துள்ளது தெரியவந்தது
இதைக்கண்ட அவர்கள் உடனடியாக குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக ஓட்டல் உரிமையாளர் பொன்னையா (56) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தொடர்ந்து மாநகராட்சி சுகாதார அலுவலர் ஸ்டாலின் பாக்கியநாதன் மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர். அரவிந்த் ஜோதி ஆகியோர் ஆய்வு செய்து ஹோட்டலுக்கு சீல் வைத்தனர்.