இஸ்லாமிய சொத்துக்களின் மீதான உரிமைகளைப் பாதிக்கும் மத்திய அரசின் வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் இன்று தவெக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அஜிதா ஆக்னல் தலைமையில்..
தூத்துக்குடி 12-வது மையவாடி வாசல் எதிர்புறத்தில் காலை 10 மணி முதல் தமிழக வெற்றி கழகம் சார்பில் தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் அவரது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், திரளான இஸ்லாமிய சமூகத்தினர் அஜிதா அக்னலுக்கு ஆதரவு தெரிவித்து சுமார் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் மத்திய அரசின் வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றினைந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்நிலையில் தூத்துக்குடியில் தவேக தொண்டர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் இது ஒன்றாக தான் இருக்கும் என்று நினைத்தபடி போராட்ட இடத்தை விட்டு தொண்டர்கள் வெளியேறினர். காவல்துறையும் இந்த இடத்தைவிட்டு கலைந்து சென்றனர்.
அடுத்தபடியாக எஸ்டிஆர் சாமுவேல் தலைமையில் தொடர்ந்த ஆர்ப்பாட்டம்...!
தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி பொறுப்பாளர் அஜித் ஆக்னல் போராட்ட இடத்தை விட்டு வெளியேறியதும் எஸ்டிஆர். சாமுவேல் ராஜ் தலைமையில் தனது ஆதரவாளர்கள் அதே இடத்தில் அதே எதிர்ப்பை வலியுறுத்தி தவெக சார்பாக இரண்டாவது ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டக்காரர்கள், இஸ்லாமிய சமூகத்தின் சொத்துக்கள் மீதான உரிமைகளைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த சட்டத் திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோஷங்கள் முழங்கி தங்களுடைய எதிர்ப்பை வலியுறுத்தினர்.
அடுத்து தொழிலதிபர் ஜேகேஆர். முருகன் தலைமையில் தொடர்ந்த தவெக ஆர்ப்பாட்டம்...!
எஸ்டிஆர் தனது ஆதரவாளர்களுடன் நடத்திய ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அனைவரும் அந்த இடத்தைவிட்டு வெளியேறினர். வெளியேறிய சிறிது நேரம் கழித்து அடுத்து முருகன் தலைமையில் தனது ஆதரவாளர்களுடன் அதே இடத்தில் அதே எதிர்ப்பை வலியுறுத்தி சுமார் 12 முதல் 1 மணி வரை வரை நடைபெற்றது. இதிலும் மத்திய அரசின் வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
குழப்பம் அடைந்த தூத்துக்குடி தவெக தொண்டர்கள்
தூத்துக்குடி 12 வது மையவாடி வாசல் எதிர்ப்புறம் ஒரே இடத்தில், 9 மணி முதல் 10 மணி வரை ஆர்ப்பாட்டம் முடிந்து ஒரு அணி சென்றதும், அதன்பின்னர் 11 மணி முதல் 12 மணி வரை மற்றொரு தரப்பு ஆர்ப்பாட்டம், அடுத்த 12மணி முதல் 1 மணி வரையில் மற்றொன்று தரப்பு ஆர்ப்பாட்டம் என தவெகவில் அடுத்தடுத்து மூன்று தரப்பினர் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தால் தூத்துக்குடி தமிழக வெற்றி கழகம் கட்சி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
தவெகவில் நடந்து வருகின்ற கோஷ்டி பூசலால் தொண்டர்கள் மட்டுமில்லாமல் தூத்துக்குடி காவல்துறையும் குழப்பம் அடைந்து காத்து கிடந்ததை பார்க்கும்போது பலரையும் முகம் சுளிக்க வைத்தது.
நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றி கழகம் ஆரம்பித்து முதலாம் ஆண்டை முடித்து இரண்டாம் ஆண்டை தொட்ட போதிலும் தூத்துக்குடியில் நிலவிவரும் கோஷ்டி பூசல்களை கவனத்தில் கொள்ள இயலாததால் தான், நான், நீ என்று தனித்தனியே தனது மாவட்ட செயலாளராக ஒவ்வொருவரும் தவேகவில் அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். இதில் தூத்துக்குடி தொழிலதிபரும் நானும் தவேக-க்காரன் தான் எனக்கு தான் மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என்று மைண்ட் வாய்ஸில் அவர் பங்குக்கு ஒரு ஆதரவாளர் கூட்டத்தை திரட்டி வைத்துள்ளார்.
கோஷ்டி பூசலில் மூழ்கி கிடக்கும் தவேகவை மீட்டெடுக்க தலைவர் விஜய் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் 2026 தேர்தல் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும் என்பதில் மாற்றமில்லை.
3 அணிகளுக்குள் ஏற்பட்டுள்ள மாவட்டச் செயலாளர் பதவி மோதல் தூத்துக்குடி தவேக தொண்டர்களுக்கு இடையே வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, தமிழக வெற்றிக் கழக தலைமை, தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் யார்.?.என்பதை நியமனம் செய்வதில் தாமப்படுத்தாமல் உடனடியாக சரியான நபரை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லாத பட்சத்தில் பெரும் கோஷ்டி மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது.
கண்டு கொள்வாரா விஜய்.!.