கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்கள் பற்றி விசாரிக்க வேண்டும் என தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து அரசு அதிகாரிகள் எஸ்.சந்திரன், சலேஷ் குமார் உட்பட சிலர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை முன்னதாக விசாரணை நடத்தியது உச்ச நீதிமன்றம், அதிகாரிகளின் சொத்து விவரங்களை தமிழ்நாடு மாநில லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன், இந்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதற்கான அவகாசத்தை நீதிமன்றம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து எதிர்மனுதாரர் ஹென்றி திபேன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். ஏனெனில் அருணா ஜெகதீசன் கமிட்டி அமைக்கப்பட்டதால்தான் தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த விவகாரத்தில் தனது விசாரணையை கைவிட்டது. எனவே இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். அதுகுறித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். அது தான் எங்களது பிரதான கோரிக்கையாக உள்ளது என்று வலியுறுத்தினார்.
இதையடுத்து நீதிபதிகள் உத்தரவில், இந்த வழக்கை ஹோலி விடுமுறைக்கு பின்னர் வரும் புதன்கிழமை ஒத்திவைக்கிறோம். அப்போது இந்த விவகாரத்தில் முன்னதாக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு தொடருமா அல்லது ரத்து செய்ய வேண்டுமா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். அதுவரையில் தற்போதைய நிலையே தொடரும் என்று உத்தரவிட்டனர்.