தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் தாய் , மகள் கொலை வழக்கில் ட்ரோன் கேமரா மூலம் தேடப்பட்டு வந்த குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
எட்டயபுரம் மேலநம்பிபுரத்தைச் சேர்ந்த சீதாலட்சுமி (75), அவரது மகள் ராமஜெயந்தி (45) ஆகியோரை கடந்த 3 ஆம் தேதி கொலை செய்து தங்கநகைகள் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்த வழக்கில், அதே ஊரைச் சோந்த முகேஷ் கண்ணன் (25), தாப்பாத்தி கிராமம் வேல்முருகன் (18) உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த இருவரையும் போலீசார் சுற்றி வளைத்தபோது தப்பியோடியதில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவித்தன.
இச்சம்பவத்தில் மேலும் தொடா்புடைய மேல நம்பிபுரத்தைச் சோந்த முனீஸ்வரன் (25) என்பவா் அயன்வடமலாபுரம் காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாகத் தகவலையடுத்து தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின்பேரில் நெல்லை சரக டிஐஜி (பொ) சந்தோஷ் ஹதிமணி, தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பாட் ஜான் ஆகியோா் தலைமையில் 5 டிஎஸ்பிக்கள், 20 ஆய்வாளா்கள் அடங்கிய 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் காட்டுப்பகுதியில் 6 ட்ரோன் கேமராக்களை பறக்கவிட்டு தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், காட்டுக்குள் பதுங்கியிருந்த முனீஸ்வரனை போலீஸார் சுற்றி வளைத்தபோது, உதவி ஆய்வாளர் முத்துராஜை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.. இதையடுத்து, போலீசார் முனீஸ்வரனை துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடையந்த முனீஸ்வரன், எஸ்ஐ முத்துராஜ் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்