இந்தியாவில் சாலை விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் எம்பவர் இந்தியா சார்பில் தூத்துக்குடி வாகைக்குளம் சுங்கச்சாவடியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர் சிவம்சர்மா தலைமை தாங்கினார். ஆணைய மேலாளர் அகிலேஷ் வரவேற்று பேசினார். தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் ஆ.சங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியை முன்னிட்டு அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்துக்கள் விளக்கப்பட்டன. சாலை பாதுகாப்பு குறித்து துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. பேருந்து, லாரிகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டன. மருத்துவர்களுக்கு கண் பரிசோதனை முகாம், நீரிழிவு நோய் பரிசோதனை செய்யப்பட்டது. அனைத்து தேசிய நெடுஞ்சாலை பணியாளர்களுக்கும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆணைய பொறியாளர்கள் கலைச்செல்வன், வீர ராஜேஷ் மணி மற்றும் வாகைக்குளம் சுங்கச்சாவடி மேலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.