வருமான சான்று வழங்க ரூ.14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் தாசில்தார், துணை தாசில்தார் ஆகிய இரண்டு பேருக்கும் தலா இரண்டுஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள டி.பவழங்குடியை சேர்ந்த மாபூஷா என்பவருடைய மனைவி கமுர்நிஷா (வயது 40). என்.எல்.சி. நிறுவனத்தில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வந்த மாபூஷா, உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் கமுர்நிஷா, அரசால் வழங்கப்படும் வேலைவாய்ப்பு, உதவித்தொகை மற்றும் கல்வி உதவித்தொகை ஆகியவற்றைப் பெறுவதற்காக, தனது மகனுக்கும் இருப்பிடச் சான்று, வருமானம் மற்றும் சாதிச் சான்று பெறவேண்டி இ-சேவை மையம் மூலம் கடந்த 2019-ஆம் ஆண்டு விண்ணப்பித்திருந்தார்.
இதையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு ஸ்ரீமுஷ்ணம் தாசில்தாராக இருந்த கண்ணன் (43), துணை தாசில்தாரான அருள்பிரகாசம் (56) ஆகியோர் சான்று வழங்க வேண்டுமானால் தங்களுக்கு தலா ரூ.7 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.14 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என கமுர்நிஷாவிடம் கூறியுள்ளனர். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கமுர்நிஷா, கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து கடலூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கூறிய அறிவுரைப்படி கமுர்நிஷா கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி அன்று ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகத்திற்கு சென்று தாசில்தார் கண்ணன், துணை தாசில்தார் அருள்பிரகாசம் ஆகியோரிடம் இரசாயன பொடி தடவிய ரூ.14 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் கையும் களவுமாக அவர்களை பிடித்து கைது செய்தனர். மேலும் லஞ்ச பணம் வாங்க உடந்தையாக இருந்த உத்திரவன்னியன் (30) என்பவரும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கண்ணன், அருள்பிரகாசம் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு கடலூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து சாட்சிகளின் விசாரணையும் முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. சிறப்பு நீதிபதி நாகராஜன் தீர்ப்பில் கூறியது, குற்றம் சாட்டப்பட்ட கண்ணன், அருள்பிரகாசம் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், உத்திரவன்னியனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 3 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.