நெல்லையில் டாஸ்மாக் கடைக்கு முன் வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மகும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள கீழச்செவல் நயினார்குளத்தைச் சேர்ந்தவர் முப்புடாதி. இவரது மகள் மணிகண்டன் (வயது 29). இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். நேற்று காலை மணி உள்ளகண்டன் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு, மாலையில் நெல்லை மேலப் பாளையம் அருகே மேல கருங்குளம் டாஸ்மாக் கடை அருகில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்மகும்பல் திடீரென. மணிகண்டனை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல் தப்பிச் சென்றது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் விஜயகுமார், உதவி போலீஸ் கமிஷனர் சரவணன், மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட மணிகண்டனின் உடலை பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் இருந்து தப்பி சென்றதாக கூறப்பட்டதை தொடர்ந்து நெல்லை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டத்தில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
நெல்லை டாஸ்மாக் கடைக்கு முன் வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.