தூத்துக்குடியில் விபத்தில் கையை இழந்தவருக்கு உரிய இழப்பீடு வழங்காததால் நீதிமன்றம் உத்தரவின் பேரில் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம். ஸ்ரீவைகுண்டம் தாலூகா, தென்திருப்பேரை,அழகு முத்தாரம்மன் கோவில் தெருவை சார்ந்த துரைராஜ் என்பவரது மகன் முத்து (43). இவர் லோடுமேனாக வேலை செய்து வந்தார். அவர் கடந்த 11.4.2015 அன்று முக்காணி சேம்பர்ஸ் விலக்கு அருகே திருநெல்வேலி டிவிசனுக்கு உட்பட்ட அரசு பேருந்தில் பயணம் செய்த போது அந்த பேருந்தும், மதுரை டிவிசனுக்கு உட்பட்ட அரசு பேரூந்தும் எதிர்எதிராக மோதி விபத்துக்குள்ளாகியதில் முத்துவின் வலது கை துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் வக்கீல் வி.ரவீந்திரன் என்பவர் மூலமாக ரூ.50,00,000/- நஷ்டஈடு கோரி தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் நீதிபதி இரு அரசு போக்குவரத்து கழகமும் சேர்ந்து பாதிக்கப்பட்ட மனுதாருக்கு நஷ்டஈடாக ரூ.22,52,631/- நஷ்டஈடு தொகையும், மனு தேதி முதல் 7.5% வட்டி மற்றும் செலவு தொகையுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று 26.2.2020 அன்று உத்தரவிட்டார்.
அதனை எதிர்த்து மதுரை டிவிசன் அரசு போக்குவரத்துகழகம் மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தததை தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றம் வாகன விபத்து முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொகையில் ரூ.1000- ஐ மட்டும் குறைத்து இரு போக்குவரத்து கழகங்களும் சேர்ந்து பாதிக்கப்பட்ட மனுதாருக்கு ரூ.22,51,631/- மும் மனு தேதி முதல் 7.5% வட்டி மற்றும் செலவு தொகையுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று 13.2.2024 அன்று உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி டிவிசன் அரசு பேருந்து நிர்வாகம் அவரது பங்கிற்குரிய தொகை வட்டியுடன் சேர்த்து ரூ.15,91,000/- செலுத்திய நிலையில், மதுரை டிவிசன் அரசு போக்குவரத்து நிர்வாகம் அவர்களது பங்கிற்குரிய தீர்ப்பு தொகையை செலுத்ததால், வட்டியுடன் ரூ.17,55,558/- செலுத்த வேண்டும் என்று மனுதார் தரப்பில் வக்கீல் ரவீந்திரன் மூலமாக தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டு தொகையை செலுத்தாததால் மதுரை டிவிசனை சார்ந்த அரசு பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி வசீத் குமார் உத்தரவிட்டார். இதையடுத்து தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் மதுரைக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்த அரசு பேருந்தை அமினா கனகவல்லி ஜப்தி செய்தார்.