பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் சமரசம் செய்து வைக்க 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட வழக்கில், பெண் எஸ்.ஐ.க்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தொழிலில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை தொடர்பாக அழகேசன் என்பவருக்கும், செல்வராஜ் என்பவருக்கும் இடையில் பிரச்னை இருந்து வந்தது. இதுசம்பந்தமாக கடந்த 2013ம் ஆண்டு அழகேசன், செல்வராஜை அவரது வீட்டுக்கு சென்று மிரட்டியுள்ளார். இதனால் செல்வராஜ், வேளச்சேரி போலீசில் அழகேசனுக்கு எதிராக புகார் அளித்துள்ளார். இந்நிலையில் பிரச்னையில் சமரசம் செய்து வைக்க 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக வேளச்சேரி காவல் நிலையத்தில் அப்போது உதவி ஆய்வாளராக பணியாற்றிய கலைச்செல்விக்கு எதிராக, செல்வராஜ், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், வேளச்சேரி காவல் நிலையத்தில் அப்போது உதவி ஆய்வாளராக பணியாற்றிய கலைச்செல்விக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.