திருச்செந்தூர் கடற்கரையில் கிடைத்த 4வது கல்வெட்டு. முருகப் பெருமானின் முக்கிய வரலாற்றை கூறியதால் பக்தர்கள் மகிழ்ச்சி
தூத்துக்குடி திருச்செந்தூர்
By Mervin on | 2025-01-22 09:40:55
திருச்செந்தூர் கடற்கரையில் கிடைத்த 4வது கல்வெட்டு. முருகப் பெருமானின் முக்கிய வரலாற்றை கூறியதால் பக்தர்கள் மகிழ்ச்சி

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். 

திருவிழா நாட்களில் மற்றும் விடுமுறை தினங்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதைத்தவிர பவுர்ணமி தினங்களில் அதிகளவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர். 

கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக திருச்செந்தூரில் கடலின் சீற்றம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் கடல் அரிப்பு ஏற்பட்டது.

இதனால் கடற்கரைக்கு பக்தர்கள் இறங்கி படிக்கட்டுகள் தகரம் மற்றும் தடுப்புவேலிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் அந்த இடத்தின் வழியாக பக்தர்கள் இறங்கி நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து திருச்செந்தூரில் கடலின் அலைகள் அதிகமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே கடல் அரிப்பு ஏற்பட்ட இடத்தில் சுமார் 6 அடி உயரம் கொண்ட கல்வெட்டு ஒன்று கரையில் தென்பட்டது. ஆனால் அந்த கல்வெட்டு கவிழ்ந்த நிலையில் கிடந்தது. இதை சரி செய்து கல்வெட்டை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் கோவில் பணியாளர்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் இணைந்து கடற்கரையில் கிடந்த கல்வெட்டை மீட்க முயற்சித்தனர்.

இதற்காக கீழே உள்ள கான்கிரிட்டை அகற்ற போராடி வந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கல்வெட்டை மீட்க போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் கல்வெட்டு அதிக எடையுடன் இருந்ததால் நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பிறகு நீண்ட நேரம் போராடி கல்வெட்டை புரட்டி போட்டனர்.

அதைத் தொடர்ந்து அங்கிருந்த கோவில் பணியாளர்களும் கடற்கரைப் பணியாளர்களும் கல்வெட்டில் திருநீறு தேய்த்து எழுத்துக்களைப் படித்தனர்.

இந்த கல்வெட்டில் சத்திய தீர்த்தம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இதன் பலன் துன்பம் முழுவதையும் நீக்கி நீக்குதற்குரிய ஊழ்வினையை அறவே தொலைத்து வேத சாஸ்திராதி கல்விகளையும் தந்து சண்முகக் கடவுளுடைய பாதாரவிந்த அருட் செல்வத்தையும் கொடுக்கும் என்று கூறப்பட்டது.

ஏற்கனவே திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் 3 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் மாதா தீர்த்தம், பிதா தீர்த்தம், முனி தீர்த்தம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட மூன்று கல்வெட்டுகளிலும் சண்முகர் என்று முருகனை குறிப்பிடவில்லை. இந்த கல்வெட்டில் தான் முருகனை குறிப்பிட்டு கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கல்வெட்டு சத்திய தீர்த்தம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முருகனை வணங்குபவர்களுக்கு நிச்சயம் வேண்டிய வரம் கிடைக்கும் என்பதை அசைக்க முடியாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது இந்த கல்வெட்டு.

தற்போது கடலில் இருந்து திருப்பி மட்டும் போடப்பட்டுள்ள இந்த கல்வெட்டு மீண்டும் கடல் அலையில் சிக்கி சேதமடையும் முன்பு கல்வெட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE