தூத்துக்குடியில் கிரிக்கெட் விளையாடும்போது ரன் எடுக்க ஓடியவர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 3வது தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் மகன் ஜான்சன் (46), நில தரகரான இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள இவர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று மீளவிட்டான் பகுதியில் நடந்த கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது ரன் எடுக்க ஓடியபோது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
அங்கிருந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து அவரது உடல்பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்துத் தொடர்பாக சிப்காட் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.