சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் உண்டியல் பணம் எண்ணும் போது திருடிய தூத்துக்குடி பெண் போலீசார் உட்பட 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலும் ஒன்று. இங்கு மாநில தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய இடங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் 20ம்தேதிக்கு மேல் கோயிலில் உள்ள உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பணம் எண்ணப்படுவது வழக்கம். உண்டியல் எண்ணும் பணி முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்.
இந்நிலையில், நேற்று சங்கரநாராயண சுவாமி கோயிலில் துணை ஆணையர் கோமதி முன்னிலையில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் 4 பேர் திருடியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கோயில் அவுட் போஸ்ட் போலீசார் சந்தேகத்திற்கு இடமான 4 பெண்களை பிடித்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் மகளிர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் ராஜபாண்டி நகரைச் சோந்த காளிராஜ் மனைவி கா.மகேஸ்வரி (42), சங்கரன்கோவில் அருகே உள்ள கோ.மருதப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி (65), மல்லிகா (31), மாரியம்மாள் (40) ஆகியோர் இணைந்து உண்டியல் நடத்தினர். பணம் எண்ணும்போது ரூ.17,710ஐ திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் பணம் திருட்டில் ஈடுபட்ட ஏட்டு மகேஸ்வரி மற்றும் 3 பெண்களை கைது செய்தனர்.